பயணிகள் தவறவிட்ட பொருட்களை திரும்ப பெற விதிமுறைகள் தளர்வு மங்களூரு விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு


பயணிகள் தவறவிட்ட பொருட்களை திரும்ப பெற விதிமுறைகள் தளர்வு   மங்களூரு விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு
x

பயணிகள் தவறவிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப பெற விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு இருப்பதாக மங்களூரு விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு: பயணிகள் தவறவிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப பெற விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு இருப்பதாக மங்களூரு விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த விமான நிலையத்தில் பயணிகளின் வருகை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

இவ்வாறு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ஏராளமானோர் தங்களது உடைமைகள், பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை விமான நிலையத்திலேயே மறந்து தவறவிட்டு செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

பயணிகள் தவறவிட்ட...

இவ்வாறு பயணிகள் தவறவிட்டு சென்ற ஆதார் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பான் கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும், பொருட்கள், உடைமைகளையும் விமான நிலைய போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஊழியர்கள் மீட்டு விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்து உள்ளனர். அந்த ஆவணங்கள், பொருட்கள் மற்றும் உடைமைகளை உரியவர்கள் வந்து பெற்றுச் செல்ல பல்வேறு விதிமுறைகள் இருந்தன.

தற்போது அந்த விதிமுறைகளை விமான நிலைய நிர்வாகம் எளிமையாக்கி உள்ளது. இதுபற்றி விமான நிலைய மேலாளர் கூறியதாவது:-

விதிமுறைகள்...

பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அப்போது அவர்களது பொருட்கள், உடைமைகள், ஆவணங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும். அவ்வாறு சோதனைக்காக பயணிகள் ஒப்படைத்திருந்த ஆவணங்களைத்தான் அவர்கள் மீண்டும் பெற மறந்து தவறவிட்டு சென்றுள்ளனர். இதுதவிர உள்நாட்டு, வெளிநாட்டு விமான பாதுகாப்பு பிரிவு பகுதிகளில் அமர்ந்திருந்த பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தவறவிட்டு சென்றிருக்கிறார்கள்.

தோராயமாக ஒரு மாதத்திற்கு இவ்வாறு 150 பொருட்களை பயணிகள் தவறவிட்டு சென்றிருக்கிறார்கள். அவற்றை நாங்கள் மீட்டு பத்திரமாக வைத்துள்ளோம். அவற்றை உரிமையாளர்கள் மீண்டும் பெற நேரிலோ அல்லது அவரது அனுமதி பெற்ற முகவரோ வந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விதிமுறைகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story