பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
இறுதி வாக்காளர் பட்டியல்
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட 198 வார்டுகள் இருந்தன. தற்போது வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் 29-ந் தேதி(அதாவது இன்று) வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதன்படி ஒரு நாளுக்கு முன்பே நேற்று மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் 243 வார்டுகளில் 41 லட்சத்து 14 ஆயிரத்து 383 ஆண் வாக்காளர்களும், 38 லட்சத்து 3 ஆயிரத்து 747 பெண் வாக்காளர்களும், 1,433 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 79 லட்சத்து 19 ஆயிரத்து 563 பேர் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
இணையதள முகவரி
மாநகராட்சி தயாரித்த இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி வெளியிட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை bbmp.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து கொள்ளலாம். மேலும் வார்டு அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்கும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.