தோல் நோயால் இறக்கும் பசு மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


தோல் நோயால் இறக்கும் பசு மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம்-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

தோல் நோயால் இறக்கும் பசு மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:- வடகர்நாடக பகுதியில் பசு மாடுகளுக்கு கட்டி தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகின்றன. அவ்வாறு நோய்வாய்ப்பட்டு இறக்கும் பசு மாடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் விவசாய பம்புசெட்டுகளுக்கு தற்போது 5 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை 7 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பம்புசெட்டுகளுக்கு 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

கர்நாடகத்தில் மின்துறையை தனியார்மயம் ஆக்கமாட்டோம். கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக 11 ஆயிரத்து 137 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்துள்ளோம். கர்நாடகத்தில் 3 ஆண்டுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தை நாங்கள் வழங்கினோம். எனக்கு எதிராக காங்கிரசார் கூறும் விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படவில்லை. அரசியலில் எதிர்ப்புகள் இருக்க வேண்டும். விமர்சனங்களை நேர்மறை, படிகட்டுகளாக எடுத்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story