மதத்தை காரணம் காட்டி திருமணத்தை பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள் - கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு!
பெண்ணின் தாய் முஸ்லிம் என்பதால், இந்து ஆணுடன் நடந்த திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள உதயம்பேரூரில் பி ஆர் லாலன் மற்றும் ஆயிஷா தம்பதியினர் வசிக்கின்றனர். இருவரும் டிசம்பர் 2, 2021 அன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினர் தங்களது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, கொச்சி மாநகராட்சி செயலாளரின் திருமண அதிகாரியிடம் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், பெண்ணின் தாய் ஒரு முஸ்லீம் என்பதால் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் மட்டுமே அவர்களின் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் தம்பதியினருக்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த தம்பதியினர் தங்களது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அப்போது அரசு நிர்வாகம் தரப்பில், பெண்ணின் தாய் முஸ்லிம் என்பதால் இந்து ஆணுடன் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விவாதத்தை கேட்ட நீதிபதி பிவி குன்கிகிருஷ்ணன் கூறியதாவது:- திருமணப் பதிவு விதிகள், 'பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை' பாதுகாக்க உருவாக்கப்பட்டது என்று கூறினார். தம்பதியினரின் பெற்றோர் இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்தை பதிவு செய்யாததற்கு இது சரியான காரணம் அல்ல.
ஸ்ரீ நாராயண குரு, அய்யன்காளி போன்ற மாபெரும் சீர்திருத்தவாதிகள் வாழ்ந்து மதச்சார்பின்மை கொள்கையை பரப்பிய மாநிலம் கேரளா. சில சாதிக் குழுக்கள் இத்தகைய சீர்திருத்தவாதிகளின் பெயர்களை அபகரிக்க முயல்கின்றன. அவர்கள் போன்ற மாபெரும் சீர்திருத்தவாதிகள்அனைத்து குடிமக்களுக்கும், மதம் மற்றும் ஜாதி வேறுபாடின்றி தலைவர்கள் என்று கூறினார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து குடிமக்களும் தங்கள் சொந்த மதத்தை பின்பற்றவும், அவர்களின் சொந்த சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளைப் பின்பற்றவும் சுதந்திரம் அளிக்கிறது.மேலும், திருமணம் நடந்ததா இல்லையா என்பது மட்டுமே முக்கியம் என்று கூறினார்.
கேரள திருமணப் பதிவு விதிகள், 2008ன் கீழ் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு மதம் அடிப்படையாக இருக்கக் கூடாது என்று தெரிவித்து மனுதாரர்களின் திருமணத்தை இரண்டு வாரங்களுக்குள் பதிவு செய்ய கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.