ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் அண்ணன் மகன் திடீர் மாயம்
ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் அண்ணன் மகன் மாயமானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சிக்கமகளூரு;
ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரேணுகாச்சார்யா. இவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளராகவும் உள்ளார். இவரது அண்ணன் ரமேசின் மகன் சந்திரசேகர்(வயது 27). சாலை, கட்டிட காண்டிராக்டர் வேலைகள் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி காலை சந்திரசேகர் தனது வீட்டில் இருந்து காரில் வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை ேதடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ஒன்னாளி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சந்திரசேகரை தேடிவருகின்றனர்.
பரபரப்பு
இதற்கிடையே போலீசார், ஒன்னாளி சாலை பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் சந்திரசேகர் காரில் சிவமொக்காவுக்கு சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து கொப்பா கவுரிகத்தே பகுதியில் உள்ள வினய் குருஜி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவரது செல்போன் ஒன்னாளியில் வைத்து சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதும் தெரியவந்துள்ளது. சந்திரசேகர் காணாமல் போனதால் அவரது குடும்பமே சோகத்தில் உள்ளது. மேலும் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் அண்ணன் மகன் காணாமல் போனதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.