பல்லாரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் 3 பேர் சாவு: கர்நாடக அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்
பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்சார துண்டிப்பால் 3 நோயாளிகள் இறந்தது குறித்த விசாரணை அறிக்கை அரசிடம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் என்று விசாரணை குழுவின் தலைவி கூறினார்.
பல்லாரி: பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் மின்சார துண்டிப்பால் 3 நோயாளிகள் இறந்தது குறித்த விசாரணை அறிக்கை அரசிடம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் என்று விசாரணை குழுவின் தலைவி கூறினார்.
பிரச்சினை கிளப்பியது
பல்லாரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் முல்லா உசேன், சங்கரம்மா, சீத்தம்மா ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பிரச்சினை கிளப்பியது.
இதற்கு விளக்கம் அளித்த அரசு, அந்த நோயாளிகள் மின் துண்டிப்பால் இறக்கவில்லை, அவர்கள் நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறியது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
இன்று அறிக்கை தாக்கல்
இதற்கிடையே நோயாளிகள் இறந்தது குறித்து விசாரிக்க பெங்களூரு அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியை டாக்டர் ஸ்மிதா தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்த குழுவினர் நேற்று பல்லாரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. டாக்டர்கள் மற்றும் நோயாளிகளிடம் அந்த குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த விசாரணை குழு தலைவி ஸ்மிதா, 'இங்கு நோயாளிகள் 3 பேர் இறந்தது குறித்து விசாரணை நடத்தி முடித்துள்ளோம். இதன் அறிக்கையை நாளை (இன்று) அரசிடம் தாக்கல் செய்வோம்' என்றார்.