இலவச வீட்டு மனைப்பட்டா கோரி உப்பள்ளி எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை; குடிசை வாசிகள் போராட்டம்
இலவச வீட்டு மனைப்பட்டா வழங்ககோரி உப்பள்ளி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிசை வாசிகள் போராட்டம் நடத்தினர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் மண்டூர் ரோடு பகுதியில் அரிச்சந்திரா காலனி உள்ளது. அங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். அவர்கள் குடிசை வீடுகளில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அவர்கள் உப்பள்ளி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு கவுன்சிலர் ஷோபா மணிகுண்டல் தலைமை தாங்கினார்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பிரசாந்த் அப்பய்யா எம்.எல்.ஏ., போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேசினார். அப்போது அவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் உடனடியாக இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ. பிரசாந்த் அப்பய்யா, இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.