குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
சிக்கமகளூரு அருகே குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் கெலமக்கி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். மேலும் குண்டும், குழியுமான சாலையில்தான் அவர்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது. முறையான குடிநீர் மற்றும் சாலை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கூறி மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் பஞ்சாயத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். சீரான சாலை, போக்குவரத்து வசதிகள், வீடுகளுக்கு பட்டா ஆகியவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதைவிட பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபுவிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.