பெங்களூருவில் 200 ஆண்டு பழமையான புத்தர் சிலை மீட்பு; ஐதராபாத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற 200 ஆண்டு பழமையான புத்தர் சிலையை மீட்ட போலீசார், இதுதொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்தவர் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
சம்பங்கிராம் நகர்:
5 பேர் கைது
பெங்களூரு சம்பங்கிராம் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக சூட்கேஸ் பெட்டியுடன் சுற்றிய 5 பேரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அந்த சூட்கேஸ் பெட்டியை திறந்து பார்த்த போது, அதற்குள் புத்தர் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றி 5 பேரிடமும் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள்.
அந்த புத்தர் சிலையை விற்பனை செய்ய 5 பேரும் சுற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த ரகு (வயது 45), பெங்களூரு உரமாவுவை சேர்ந்த உதய்குமார் (37), விவேக்நகரை சேர்ந்த டிசோசா (44), ஹெண்ணூரை சேர்ந்த சரண் நாயர் (41), கொத்தனூரை சேர்ந்த பிரசன்னா (39) என்று தெரிந்தது.
பழமையான புத்தர் சிலை
கைதானவர்களில் ரகுவிடம், ஸ்ரீகாந்த் என்பவர் 200 ஆண்டு பழமையான புத்தர் சிலையை ரூ.30 லட்சத்திற்கு விற்று இருந்தார். மேலும் அந்த புத்தர் சிலையின் சிறப்பு குறித்தும் ஸ்ரீகாந்த் தெரிவித்து இருந்தார். அந்த சிலையை வெளிநாட்டில் விற்பனை செய்தால் பல கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார். இதனை நம்பிய ரகு, பெங்களூருவுக்கு வந்து மற்ற 4 பேருடன் சேர்ந்து புத்தர் சிலையை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும், சிலரிடம் விற்பனை செய்யவும் முயற்சித்தது தெரியவந்தது.
கைதான 5 பேரிடம் இருந்து 200 ஆண்டு பழமையான புத்தர் சிலை மீட்கப்பட்டதுடன், 5 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேர் மீதும் சம்பங்கிராம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.