தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய அரியவகை உயிரினங்கள் மீட்பு; பெண் உள்பட 7 பேர் கைது


தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய அரியவகை உயிரினங்கள் மீட்பு; பெண் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய அரியவகை உயிரினங்கள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

விமானத்தில் கடத்தல்

பெங்களூரு புறநகர் பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து வரும் விமானத்தில் அரியவகை உயிரினங்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து சென்று அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தனர்.

அப்போது அதில் சிகப்பு கால் ஆமை, மலைப்பாம்பு உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் இருந்தது தெரிந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பலவித உயிரினங்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெண் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

139 உயிரினங்கள்

மேலும், அவர்களிடம் இருந்து வெளிநாட்டில் இருந்து கடத்திய சிகப்பு கால் ஆமை, மஞ்சள் மற்றும் பஞ்சை நில மலைபாம்புகள், சிறிய வகை முதலை, மஞ்சள் தலை கொண்ட ரங்கூன் வகை நாய், குரங்கு உள்ளிட்ட 18 அரியவகை உயிரினங்கள் மீட்கப்பட்டது.

மேலும், அவர்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த அரியவகை உயிரினங்களை பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 48 வகையான 139 உயிரினங்களை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வன உயிரினங்களை பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் அதிகாரிகள் விட்டனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story