மங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்
புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக மங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மங்களூரு-
கொரோனா பரவல்
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா தொற்று காரணமாக மாநில அரசு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டல், ரெஸ்டாரண்டு, பப்புகளுக்கு நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நிர்வாகமும் கடைபிடிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மங்களூரு மாநகர இணை போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மங்களூரு மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீஸ் நிலையங்களில் அனுமதி வாங்கிய ஓட்டல்கள், பப் ஆகியவை நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் ஓட்டல்கள், பப்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதி பெறவேண்டும்
இங்கு அனைவருக்கும் முக கவசம் கட்டாயம். சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். இந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத ஓட்டல்கள், பப்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் போலீசிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது. மத வழிபாடுகளுக்கு எந்த தடையும் இல்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் மதுபானக்கடைகள் செயல்பட கூடாது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு தடையில்லை. நள்ளிரவுக்கு மேல் கொண்டாடினால் அதற்கு மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெறவேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களிடம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டள்ளது. போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.