குவெம்பு பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
சிவமொக்கா குவெம்பு திறந்த நிலை பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவமொக்கா:-
முறைகேடு புகார்
சிவமொக்காவில் குவெம்பு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அங்கு குவெம்பு திறந்தநிலை பல்கலைக்கழகமும் செயல்பட்டு வருகிறது. அதன்மூலம் ஏராளமான பிரிவுகளில் மாணவ-மாணவிகள் பயின்று பட்டம் பெற்று வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் திறந்த நிலை பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் குறிப்பிட்ட காலக் கெடு முடிந்த பின்னரும் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக பல்கலைக்கழகம் சார்பில் அதிகளவு பணம் லஞ்சமாக பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த திறந்த நிலை பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வில் வெற்றி பெறுவதாக அறிவிப்பதற்கும் பணம் பெறப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து துணை வேந்தர் தரப்பில் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர், இந்த முறைகேட்டிற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் வீரபத்திரப்பாதான் காரணம் என்று மாநில கவர்னருக்கு, புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற மாநில கவர்னர், 2 பேர் கொண்ட குழு அமைத்து, இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த குழுவினர் விசாரணை நடத்தி கவர்னரிடம் அறிக்கை அளித்தனா். இந்த அறிக்கை கவர்னர் மாநில அரசுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
இந்த அறிக்கையை வாங்கிய கர்நாடக அரசு, பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரநாத் தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழுவினர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, இன்னும் 20 நாட்களுக்குள் மாநில அரசுக்கு அறிக்கை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையில் இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பல்கலைக்கழக துணை வேந்தர் வீரபத்திரப்பா கூறியதாவது:-
திறந்த நிலை பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில் நான் இந்த குற்றச்சாட்டு குறித்து, மாநிலர் கவர்னர் தாவர்சந்த் கெலாட் மற்றும் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் உரிய விளக்கம் அளிக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.