அணைக்கட்டு பகுதியில் சுற்றி திரியும் காட்டுயானை கூட்டம்
என்.ஆர்.புரா அருகே அணைக்கட்டு பகுதியில் சுற்றி திரியும் காட்டுயானைகூட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு-
என்.ஆர்.புரா அருகே அணைக்கட்டு பகுதியில் சுற்றி திரியும் காட்டுயானைகூட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புராவை அடுத்த கடகினபைலு கிராமத்தில் பத்ரா அணை உள்ளது. இந்த அணையையொட்டி சிறிய அணைக்கட்டு உள்ளது. வனப்பகுதியையொட்டி, அணைகள் உள்ளதால் அடிக்கடி காட்டுயானைகள் வந்து, தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். மேலும் சில நேரங்களில் அணையையொட்டிய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்வது என பல்வேறு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த அணைக்கட்டு பகுதிகளில் காட்டுயானைகள் மீண்டும் நடமாட தொடங்கிவிட்டன.
11 காட்டுயானைகள் நடமாட்டம்
இந்நிலையில் நேற்று முன்தினம் என்.ஆர்.புரா கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள விளை நிலத்தில் 11 காட்டுயானைகள் கூட்டமாக நடமாடி கொண்டிருந்தன. இதை பார்த்த கிராம மக்கள் அந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க முயற்சித்தனர். ஆனால் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்லவில்லை. இதையடுத்து இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்து, காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி அடித்தனர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இந்நிலையில் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள் யானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.