பெங்களூருவில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் ஊழியரை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை


பெங்களூருவில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன்  ஊழியரை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை
x

பெங்களூருவில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் ஊழியரை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.2 கோடி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு: பெங்களூருவில், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் ஊழியரை கட்டிப்போட்டு அடகு கடையில் ரூ.2 கோடி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ரூ.2 கோடி நகைகள் கொள்ளை

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லக்கசந்திரா பகுதியில் பவர்லால் என்பவர் நகைக்கடை மற்றும் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு பவர்லால் கடையில் வேலை செய்யும் தர்மேந்திரா என்பவர் கடையை திறந்து வைத்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு நகை வாங்குவது போல 2 பேர் வந்து நகைகளை பார்த்து கொண்டு இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு மேலும் 2 பேர் வந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் தர்மேந்திராவை மிரட்டிய 4 பேரும் தர்மேந்திராவின் கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் லாக்கரில் இருந்த 3½ கிலோ தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

வலைவீச்சு

இந்த நிலையில் பவர்லால் கடைக்கு வந்து பார்த்த போது தர்மேந்திராவின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவர்லால், தர்மேந்திரா கை, கால்கள் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து விசாரித்தார். அப்போது மர்மநபர்கள் நகைக்கடையில் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் அங்கு சென்று தர்மேந்திரா, பவர்லாலிடம் விசாரித்தனர்.

அப்போது ரூ.1.93 கோடி மதிப்பிலான நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்து உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பவர்லால் அளித்த புகாரின்பேரில் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story