பீர் பாட்டிலால் தாக்கி ரவுடி கொலை
பெங்களூருவில் முன்விரோதம் காரணமாக பீர் பாட்டிலால் தாக்கி ரவுடி கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. எதிர்கோஷ்டியினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
குடிபோதையில் தகராறு
பெங்களூரு சி.கே.அச்சுக்கட்டு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 29). ரவுடியான இவர், பெயிண்டராகவும் வேலை பார்த்து வந்தார். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் சிவராஜ் பெயர் சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உத்தரஹள்ளி அருகே இட்டமடு ரோட்டில் உள்ள மதுபானக்கடை முன்பாக தனது கூட்டாளிகளுடன் சிவராஜ் நின்று கொண்டிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கோஷ்டியை சேர்ந்த மஞ்சு, அவரது கூட்டாளிகளும் அங்கு வந்தனர். பின்னர் 2 கும்பலும் அங்குள்ள மதுபான விடுதியில் மதுஅருந்தினார்கள். குடிபோதையில் 2 கும்பல்களுக்கும் இடையே தகராறு உண்டானது. இதையடுத்து, மதுபான விடுதி உரிமையாளர், ரவுடி சிவராஜ் மற்றும் மஞ்சுவையும், அவரது கூட்டாளிகளையும் வெளியேற்றினார்கள்.
ரவுடி கொலை
அதன்பிறகு மதுபான விடுதி முன்பாக வைத்து 2 கும்பல்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் மஞ்சு உள்ளிட்டோர், ரவுடி சிவராஜை பீர் பாட்டில்களால் தாக்கினார்கள். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் கீழே விழுந்தார். பின்னர் சிவராஜ் தலையில் கல்லால் தாக்கிவிட்டு அந்த கும்பல் ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சுப்பிரமணியபுரா போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சிவராஜை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார்.
சிவராஜ் மற்றும் மஞ்சு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில் பீர் பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி சிவராஜை மஞ்சு, அவரது கூட்டாளிகள் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மஞ்சு, அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.