வாலிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்; மர்மநபருக்கு வலைவீச்சு
மங்களூருவில் வங்கி அதிகாரி போல் பேசி வாலிபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்த மர்மநபருகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
மங்களூரு;
உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்தவர் கணபதி காமத். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணபதி காமத்தின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் உங்களுடைய வங்கிக்கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி முடக்கப்பட்டுள்ளது.
இதனால் அதனை புதுபிக்க கீழ்க்கண்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வங்கி கணக்கு, ஏ.டி.எம்.கார்டு விவரங்களை தெரிவிக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கணபதி காமத்தும், செல்போனில் அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் அவர், எதிர்முனையில் வங்கி அதிகாரி போல் பேசிய நபரிடம் தனது வங்கிக்கணக்கு, ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட விவரங்களை கூறியுள்ளார். மேலும் அதைெதாடா்ந்து செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் கூறிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் கணபதியின் வங்கிக்கணக்கில் இருந்து பல தவணைகளாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதைகண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைதொடர்ந்து வங்கி அதிகாரி போல் பேசிய நபரை செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் அவருக்கு, மர்மநபர் வங்கி அதிகாரி போல் பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் உடுப்பி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.