தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் நூதன மோசடி
பத்ராவதியில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிவமொக்கா:-
தொழில் அதிபர்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் வசித்து வருபவர் நித்தீஷ் பண்டிட். தொழில் அதிபர். இவரது நண்பர் ஒருவர் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நித்தீஷ் பண்டிட்டிற்கு, ஜெகதீஷ் என்பவர் அறிமுகமானார். அவர் மூலம் சிக்கமகளூரு மாவட்ட கடூர் பகுதியைச் சேர்ந்த ஜாபர், மகேஷ் ஆகியோரும் பழக்கமானார்கள்.
இதையடுத்து ஜாபர் தனக்கு சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா பி.ஆர்.பி. பகுதியில் குடோன் இருப்பதாகவும், அங்கு ரூ.40 கோடியை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினார். அவர் டிப்-டாப் உடையில், காரில் வலம் வந்ததால் அவர் கூறியதை நித்தீஷ் நம்பினார்.
ரூ.10 லட்சம்
அதையடுத்து தன்னிடம் உள்ள பணம் அனைத்து ரூ.100 நோட்டுகளாக இருப்பதாகவும், அதை ரூ.500 நோட்டுகளாக மாற்ற இருப்பதாகவும் கூறி உள்ளார். அதற்கு 25 சதவீத கமிஷன் வழங்குவதாகவும் ஜாபர் தெரிவித்து இருக்கிறார். அதை நம்பிய நித்தீஷ் பண்டிட், மங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் தனது நண்பர் மூலம் ரூ.10 லட்சத்தை ஏற்பாடு செய்தார்.
அந்த பணத்தை தயார் செய்திருப்பது குறித்து அவர் ஜாபரிடம் தெரிவித்தார். உடனே அவர் பத்ராவதியில் உள்ள ஒரு பெரிய ஓட்டலுக்குக்கு வரும்படி கூறியிருக்கிறார். பணத்துடன் அங்கு சென்ற நித்தீசும், அவரது நண்பரும் சேர்ந்து 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக ரூ.10 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தனர். அதற்கு ஜாபரும், மகேசும் தங்களிடம் இருந்த 100 ரூபாய் நோட்டு கட்டுகள் அடங்கிய ரூ.10 லட்சம் மற்றும் கமிஷன் தொகை ரூ.2.50 லட்சம் என மொத்தம் ரூ.12.50 லட்சம் இருப்பதாக கூறி ஒரு பணப்பையை கொடுத்துள்ளனர்.
போலி ரூபாய் நோட்டுகள்
அதை பெற்றுக்கொண்ட நித்தீஷ் பண்டிட்டும், அவரது நண்பரும் பணத்தை சரிபார்க்காமல் இருந்துவிட்டனர். அதையடுத்து ஜாபரும், மகேசும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் நித்தீஷ், ஜாபர் மற்றும் மகேசை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அப்போது அவர்களது செல்போன் எண்கள் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த நித்தீஷ், உடனடியாக அவர்கள் கொடுத்த பணத்தை சரிபார்த்துள்ளார்.
அப்போது அவை அனைத்து போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இந்த நூதன மோசடி குறித்து ஜாபர், பத்ராவதி பேப்பர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜாபர் மற்றும் மகேஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.