மங்களூருவில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி
மங்களூருவில், ரூ.1 கோடி கடன் கொடுப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மங்களூரு-
மங்களூருவில், ரூ.1 கோடி கடன் கொடுப்பதாக கூறி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
வியாபாரி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்க முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக ஆன்லைனிலும் தேடி வந்தார். அப்போது ஒரு இணையதள பக்கத்தில் வியாபாரம் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதைப்பார்த்த அந்த வியாபாரி உடனே அதில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் தான் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் கொடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் ரூ.1 கோடி வரை கடன் கொடுப்பதாகவும் வியாபாரியிடம் உறுதி அளித்தார்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
அதை நம்பிய அந்த வியாபாரி தனக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடி கடன் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அந்த மர்ம நபர் வியாபாரியிடம் ஆவண செலவுகள் பரிசீலனை கட்டணம் என பல வகைகளில் பல்வேறு தவணைகளாக வியாபாரியிடம் இருந்து ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 106-ஐ ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் பெற்றார். அதன்பிறகும் அவர் கடன் கொடுக்க தாமதித்து வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த வியாபாரி இதுபற்றி கேட்க அந்த மர்ம நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வியாபாரி இதுபற்றி மங்களூரு டவுன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.