செல்போன் கடையில் ரூ.11½ லட்சம் கொள்ளை
மைசூருவில் செல்போன் கடையில் புகுந்து ரூ.11½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு:
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் கடை
மைசூரு சித்தார்த்தா நகரை சேர்ந்தவர் முகேஷ் சிக்வி (வயது 40). இவர் மண்டிமொகல்லா போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.டி. தெரு பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் முகேஷ் கடந்த 16-ந்தேதி துபாய்க்கு சென்றுவிட்டார். அவரது கடையை சந்திர பிரகாஷ் என்பவர் கவனித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திர பிரகாஷ் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவர் வழக்கம் போல செல்போன் கடைக்கு வந்தார். அப்போது கடையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
ரூ.11½ லட்சம்...
அப்போது கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் ஏராளமான செல்போன்கள் மாயமாகி இருந்தன. மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த பணமும் மாயமாகி இருந்தது. யாரோ மர்மநபர்கள் கடையின் இரும்பு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.11½ லட்சம் மதிப்பிலான செல்போன்கள், கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2.90 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சந்திரபிரகாஷ், துபாயில் இருக்கும் முகேசுக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக முகேஷ், மண்டிமொகல்லா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் தடயஅறிவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து மண்டிமொகல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.