வீட்டுமனை கொடுப்பதாக கூறி கன்னட நடிகரிடம் ரூ.18½ லட்சம் மோசடி


வீட்டுமனை கொடுப்பதாக கூறி கன்னட நடிகரிடம் ரூ.18½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வீட்டுமனை கொடுப்பதாக கூறி கன்னட நடிகரிடம் ரூ.18½ லட்சம் பெற்று மோசடி செய்த தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:-

கன்னட இளம் நடிகர்

கன்னட திரையுலகில் இளம் நடிகராக இருந்து வருபவர் மாஸ்டர் ஆனந்த். இவர், பெங்களூருவில் தனது மனைவி யசஷ்வினியுடன் வசித்து வருகிறார். சினிமா படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது பெங்களூரு அருகே கொம்மகட்டா அருகே ராமசந்திராவில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக வைத்திருந்த அறிவிப்பு பலகையை மாஸ்டர் ஆனந்த் பார்த்துள்ளார்.

இதையடுத்து, அந்த வீட்டுமனையை வாங்க அவர் முடிவு செய்தார். அப்போது அந்த வீட்டுமனை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருப்பது மாஸ்டர் ஆனந்திற்கு தெரிந்தது.

ரூ.70 லட்சத்துக்கு வீட்டுமனை

இதையடுத்து, தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ராமசந்திரா கிராமத்தில் இருக்கும் வீட்டுமனையை ரூ.70 லட்சத்திற்கு வாங்க மாஸ்டர் ஆனந்த் சம்மதம் தெரிவித்தார்.

இதற்காக கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.18½ லட்சத்தை அந்த நிறுவனத்திடம் மாஸ்டர் ஆனந்த் கொடுத்திருந்தார். அந்த வீட்டுமனையை மாஸ்டர் ஆனந்த், அவரது மனைவி யசஷ்வினி பெயரில் மாற்றி கொடுப்பதற்கான ஆவணங்களையும் தனியார் நிறுவனம் கொடுத்திருந்தது.

ரூ.18½ லட்சம் மோசடி

அதன்பிறகு, வீட்டுமனை பற்றி மாஸ்டர் ஆனந்த் கேட்ட போது தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து சரியான தகவல்கள் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் அந்த வீட்டுமனை பற்றி அவர் விசாரித்த போது, அது தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது இல்லை என்பதும், வேறு நபருக்கு சேர்ந்தது என்பதும் தெரிந்தது.

இதுபற்றி அவர் அந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பதில் கூறாத அந்த நிறுவனத்தினர், ரூ.18½ லட்சத்தை திரும்ப கொடுக்க மறுத்து விட்டனர். மேலும் சந்திரா லே-அவுட்டில் இருந்த நிறுவனத்தின் அலுவலகத்தையும் காலி செய்துவிட்டு உரிமையாளர் சென்று விட்டார்.

போலீசில் புகார்

இதனால் தன்னிடம் வீட்டுமனை கொடுப்பதாக கூறி ரூ.18½ லட்சத்தை பெற்று, அந்த தனியார் நிறுவனம் மோசடி செய்திருப்பதை மாஸ்டர் ஆனந்த் உணர்ந்தார்.

இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்தில் மாஸ்டர் ஆனந்த் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர், அதிகாரிகளை தேடிவருகின்றனர்.


Next Story