விவசாய தம்பதியிடம் ரூ.20 லட்சம் மோசடி


விவசாய தம்பதியிடம் ரூ.20 லட்சம் மோசடி
x

சிவமொக்காவில், போலி தங்கநாணயத்தை விற்று விவசாய தம்பதியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிவமொக்கா:

விவசாய தம்பதி

பாகல்கோட்டை மாவட்டம் மகாலிங்கபுரா கிராமத்தில் விவசாய தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒருவர் பழக்கம் ஆகியுள்ளார். அவர்,

தம்பதியிடம் தனது பாட்டி வீட்டை இடித்து புதிய வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது 8 கிலோ தங்கநாணயம் கிடைத்தது. அந்த தங்கநாணயத்தை ரூ.20 லட்சத்திற்கு விற்க உள்ளோம், விருப்பம் இருந்தால் வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதை உண்மையென நம்பிய தம்பதியும், தங்கநாணயம் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் அக்டோபர் 15-ந்தேதி பத்ராவதி ஒளேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு தம்பதியை வரவழைத்து, அந்த நபர் 2 தங்கநாணயங்களை சோதனைக்காக கொடுத்தார்.

அந்த தங்கநாணயங்களை வாங்கி சென்ற தம்பதி, நகை ஆசாரியிடம் கொடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் உண்மையான தங்கநாணயம் என்பது தெரிய வந்தது.

ரூ.20 லட்சம் மோசடி

இதையடுத்து ரூ.20 லட்சம் கொடுத்து முழு தங்கநாணயங்களையும் வாங்க தம்பதி முடிவு செய்தனர். இதற்காக தம்பதி தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்றனர். அதன்படி கடந்த 24-ந்தேதி தம்பதியிடம், 2 பேர் வந்து 5 தங்கநாணயங்களை கொடுத்துவிட்டு ரூ.20 லட்சத்தை வாங்கி, மீதமுள்ள நாணயங்களை வீட்டில் இருந்து எடுத்துவருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். இதற்காக தம்பதி காத்து நின்றுள்ளனர்.

ஆனால் நீண்டநேரமாகியும் 2 பேரும் வரவில்லை. இதையடுத்து தம்பதி, அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அவர்கள் கொடுத்து சென்றது போலியான தங்கநாணயங்கள் என்பது தெரியவந்தது. அப்போது தான் தம்பதிக்கு, போலி தங்கநாணயங்களை விற்று ரூ.20 லட்சம் மோசடிக்குள்ளானதை அறிந்தனர்.

வலைவீச்சு

இதுகுறித்து தம்பதி, ஒளேஒன்னூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story