விவசாயியிடம் ரூ.4½ லட்சம் நூதன மோசடி


விவசாயியிடம் ரூ.4½ லட்சம் நூதன மோசடி
x

- சிக்பள்ளாப்பூரில், லாட்டரியில் ரூ.25 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி விவசாயியிடம் ரூ.4½ லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:-

விவசாயி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கோணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(வயது 38). விவசாயியான இவர் சிக்பள்ளாப்பூரில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு (கிருஷ்ணப்பாவுக்கு) லாட்டரி மூலம் ரூ.25 லட்சம் பரிசு விழுந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய கிருஷ்ணப்பா, அந்த குறுந்தகவல் எந்த செல்போன் என்ணில் இருந்து வந்ததோ, அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர் ரூ.25 லட்சம் பரிசு தொகையை பெற வேண்டும் என்றால், ரூ.4 லட்சம் முன்பணம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அதை நம்பிய கிருஷ்ணப்பா, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் 3 தவணைகளில் ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்தை அந்த செல்போன் எண்ணுக்கு அனுப்பி உள்ளார். அதன்மூலம் அந்த பணம் மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு சென்றுவிட்டது.

ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி கிருஷ்ணப்பாவுக்கு எந்த பரிசு தொகையையும் வழங்கப்படவில்லை. தான் ஏற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணப்பா, இதுபற்றி சிக்பள்ளாப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story