தமிழக வியாபாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி
குறைந்த விலைக்கு வெங்காயம் தருவதாக கூறி தமிழக வியாபாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிக்கமகளூரு:-
வெங்காய வியாபாரி
தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரா கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு. வெங்காய வியாபாரி. இவர் கர்நாடக மாநிலத்தில் விளையும் வெங்காயத்தை கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு தாவணகெரே மாவட்டம் குக்கேவாடா கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற விவசாயியுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னிடம் வெங்காயம் இருப்பதாகவும் ஒரு கிலோ ரூ.5 என்ற கணக்கில் வெங்காயம் கொடுப்பதாகவும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய தங்கவேலுவும், அவரிடம் வெங்காயம் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம் கொடுத்தார். மேலும் அதேப்பகுதியை சேர்ந்த மேலும் 3 விவசாயிகளிடம் வெங்காயம் இருப்பதாகவும், அதே விலையில் வாங்கி கொடுப்பதாகவும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ரூ.4 லட்சம் மோசடி
இதையடுத்து அவர்களுக்கும் ரூ.3 லட்சம் முன்பணமாக தங்கவேலு கொடுத்துள்ளார். பின்னர் 2-ந்தேதி வெங்காயத்தை லாரியில் அனுப்பி வைப்பதாக ரமேஷ், தங்கவேலுவிடம் தெரிவித்தார். ஆனால் சொன்னப்படி வெங்காயம் வரவில்லை. இதனால் தங்கவேலு, ரமேசை தொடர்புகொண்டார். ஆனால் அவரது நம்பர் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் குறைந்த விலைக்கு வெங்காயம் தருவதாக கூறி ரமேஷ் தன்னிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து தாவணகெரே போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.