பெண்ணிடம் ரூ.45½ லட்சம் மோசடி; 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக பெண்ணிடம் ரூ.45½ லட்சம் வசூலித்து மோசடி செய்த 6 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் ஷோபா அஞ்சான் (வயது 57). இவரது மகள் சங்கீதா. இந்த நிலையில் சங்கீதாவுக்கு கிரென்வைல் மற்றும் லாவன்யா ரோட்ரிகுஸ் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
மெல்லிசா என்பவர் மும்பையில் பங்குச்சந்தை தொடர்பான நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் கிளையை மங்களூருவில் நிறுவ உள்ளதாகவும், அந்த நிறுவனத்தை தனது கணவர் நிர்வகிக்க உள்ளதாகவும் சங்கீதாவிடம் கூறியுள்ளார்.
மேலும், நிறுவனத்தின் பங்குகளில் 37 நாட்களுக்குள் முதலீடு செய்தால், முதலீட்டாளருக்கு 30 சதவீதம் வட்டி கிடைக்கும் என கூறியுள்ளார். அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, சங்கீதா அவர்களிடம் ரூ.45½ லட்சத்தை பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி கொடுக்காமலும், முதலீட்டுக்கான வட்டியையும் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கீதாவும், அவரது தாயும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கிரென்வைல், லாவன்யா ரோட்ரிகுஸ், மெல்லிசா பெரியேரா, லாய்டு மார்டிஸ், ரோனால்டு மற்றும் புலோரா மார்டிஸ் ஆகிய 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.