திருநங்கையிடம் ரூ.5 லட்சம் அபேஸ்; 2 பேர் கைது
திருநங்கையிடம் ரூ.5 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகோடி:-
பெங்களூரு ஆடுகோடி பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்தா. திருநங்கையான இவர் தனது வீட்டில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இந்த மசாஜ் சென்டருக்கு ஹீக்கா பார் உரிமையாளரான சமீர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது சமீருக்கும், பிரசாந்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் நெருங்கி பழகியதாக தெரிகிறது.
இதையடுத்து சமீர் தனது நண்பரான சிவா என்பவரையும் மசாஜ் சென்டருக்கு அடிக்கடி அழைத்து வந்தார். இந்த நிலையில் பிரசாந்தாவின் ஏ.டி.எம். கார்டை சிவா திருடி உள்ளார். ஏற்கனவே ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீடு எண் சமீருக்கு தெரிந்து இருந்தது. இதனால் பிரசாந்தாவின் வங்கிக்கணக்கில் இருந்து சிவாவும், சமீரும் சேர்ந்து ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்தனர். இதுபற்றி அறிந்ததும் பிரசாந்தா, ஆடுகோடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவா, சமீரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிரசாந்தாவின் ஏ.டி.எம். கார்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.