ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு
உப்பள்ளியில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூரை அடுத்த குசுகல்லா சாலையில் வசித்து வருபவர் ஓம்பிரகாஷ். ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றனர். இதையடுத்து நேற்று காலை ஓம்பிரகாஷ் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கேஷ்வாப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் 82 கிராம் தங்க நகைகள், 160 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கேஷ்வாப்பூர் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.