காதலர் தின பரிசு வழங்குவதாக கூறி வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி
காதலர் தின பரிசு வழங்குவதாக கூறி வாலிபரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு:
உடுப்பி மாவட்டம் கார்கலாவை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் மத்திய கிழக்கு நாடான சைப்ரசை சேர்ந்த பெலிக்ஸ் டெய்ஸ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வாட்ஸ்-அப் எண்களை பரிமாறி கொண்டு பழகி வந்தனர். இந்த நிலையில், பெலிக்ஸ் அந்த வாலிபருக்கு காதலர் தின பரிசு வழங்குவதாக கூறி இருந்தார். மேலும் கடந்த 13-ந்தேதி வாலிபரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு பரிசு பொருட்களின் படங்களை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை பெற சுங்க வரி செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதனை நம்பிய அந்த வாலிபர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் ரூ.7.63 லட்சம் வரை செலுத்தினார். ஆனால் பரிசு பொருள் அவருக்கு வரவில்லை. இதனால் காதலர் தின பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி மர்மநபர்கள் ரூ.7.63 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் உடுப்பி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.