துபாய், பக்ரைனில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானங்களில் உடல்களில் பதுக்கி கடத்திய ரூ.91 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாய், பக்ரைனில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானங்களில் உடல்களில் பதுக்கி வைத்து கடத்திய ரூ.91 லட்சம் மதிப்பிலான தங்கமும், ரூ.6½ லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.
மங்களூரு:
ரூ.91 லட்சம் தங்கம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் நடந்த வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துபாய் மற்றும் பக்ரைனில் இருந்து வந்த விமானங்களில் 5 பயணிகள் தங்கம் கடத்தி வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.91.35 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 625 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வாய், மலக்குடல் உள்ளிட்ட உடல்களில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டு பணம்
மேலும் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தி வந்த ஒருவரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6.54 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரையும் பஜ்பே போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரிடம் இருந்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.