காரில் எடுத்து சென்ற ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல்
கலபுரகியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
பரிசுப்பொருட்கள்
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாவட்ட எல்லைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில் இதுவரை பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி பொருட்கள் சிக்கி உள்ளன. மேலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரொக்கம், குக்கர் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பருத்தி ஆலை
இந்த நிலையில் கலபுரகியில் சோதனை சாவடி வழியாக எடுத்து சென்ற ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கலபுரகி டவுன் பரதாபாத் புறநகர் பகுதியில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை மறித்து அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடி இருந்தது.
இதுகுறித்து காரில் இருந்தவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பதும், அவர் பருத்தி ஆலை உரிமையாளர் என்பதும் தெரிந்தது. அவர் தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக எடுத்து சென்றதும் தெரிந்தது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.