பணி இடமாற்றம் செய்ய ஆசிரியரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம்; கல்வித்துறை அதிகாரி கைது
பணி இடமாற்றம் செய்ய ஆசிரியரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு;
பணி இடமாற்றம்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா திம்மலாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ராஜப்பா தன்னை கர்ஜி என்னும் கிராமத்திற்கு பணி இ்டமாற்றம் செய்து கொடுக்கக் கோரி கடூரில் கல்வித்துறை அதிகாரியான ராஜண்ணா என்பவரிடம் விண்ணப்பித்தார்.
ஆனால் வெகு நாட்கள் ஆகியும் ராஜப்பா பணி இடமாற்றம் செய்யப்படாமல் இருந்துள்ளார். இதுகுறித்து ராஜப்பா, ராஜண்ணாவிடம் கேட்டபோது, அதற்கு அவர் பணி இடமாற்றம் ெசய்ய வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பணி இடமாற்றம் செய்யமுடியாது என்று கூறினார்.
ரூ.15 ஆயிரம்
இதைகேட்டு அதிர்ச்சிக்கு உள்ளான ராஜப்பா, லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என தெரிகிறது. இதையடுத்து அவர் லஞ்சம் கேட்பது குறித்து கடூர் லோக்அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லோக் அயுக்தா போலீசார், அவரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து, அதனை ராஜண்ணாவிடம் ெகாடுக்கும்படி சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி ராஜப்பா, ராஜண்ணாவிடம் பணத்தை வாங்கவருமாறு திம்லாபுரா அருகே அழைத்துள்ளார்.
கைது
அப்போது லோக் அயுக்தா போலீசார் அந்த பகுதியில் மறைந்து நின்றனர். இதையடுத்து அங்கு வந்த ராஜண்ணா லஞ்ச பணத்தை அவரிடம் இருந்து வாங்கியுள்ளார். அப்போது அந்த பகுதியில் மறைந்து நின்று கொண்டிருந்த லோக் அயுக்தா போலீசார் விரைந்து வந்து ராஜண்ணாவை கையும், களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.