பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை


பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை
x

கர்நாடகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு

பிரியங்கா காந்தி வருகை

இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கடந்த வாரம் டி.கே.சிவக்குமார் கூறினார்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெறுவதற்காக 'நா நாயகி' (நான் தலைவி) என்ற பெயரில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லியில் இருந்து நேற்று காலையில் பிரியங்கா காந்தி பெங்களூரு வந்தார்.

உற்சாக வரவேற்பு

விமான நிலையத்தில் பிரியங்கா காந்தியை டி.கே.சிவக்குமார், சித்தராமையா மற்றும் மகளிர் அமைப்பினர் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து அரண்மனை மைதானத்திற்கு வந்த பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரமாண்ட ஆப்பிள் மாலைகளையும் பிரியங்கா காந்திக்கு மகளிர் அமைப்பினர் அணிவித்தனர்.

பின்னர் அரண்மனை மைதானத்தில் நடந்த மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

வாழ்க்கையை மாற்றும் நேரம்...

கர்நாடகத்திற்கு நான் வந்திருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. முதல் முறையாக இவ்வளவு பெரிய தொண்டர்கள் கூடியிருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது. பெங்களூருவில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்த என்னுடைய சகோதரிகளின் சிரமத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இதனை என் இதயத்தில் இருந்து சொல்கிறேன்.

உங்களது வாழ்க்கையை மாற்றும் நேரம் வந்து விட்டது. உங்கள் வாழ்க்கையில் கல்வி, வேலை, குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நேரம் வந்து விட்டது. உங்களது பலம் என்ன என்பது தெரியாமல் இருக்கிறீர்கள். நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். அரசியல் கட்சிகள் உங்களது உரிமைகளை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். உங்களது உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

ரூ.1½ லட்சம் கோடி ஊழல்

நாட்டில் பல ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. பெண்களின் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா அரசு தீர்வு கண்டுள்ளதா?. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்பது பொதுவான பிரச்சினையாகும். இன்னும் சில மாதங்களில் கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் பா.ஜனதா ஆட்சி நிர்வாகத்தை பார்த்து, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் ஆட்சி நடக்கிறது. ரூ.1½ லட்சம் கோடி உங்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து, இந்த அரசு கொள்ளையடித்து கொண்டுள்ளது. பெங்களூருவில் ரூ.8 ஆயிரம் கோடி பட்ஜெட் என்றால், அதில், ரூ.3,200 கோடி ஆளும் கட்சியினருக்கு சென்று விடுகிறது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது கர்நாடகத்தில் உள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கியாஸ் சிலிண்டருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள், தற்போது பா.ஜனதா ஆட்சியில் எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மட்டும் இல்லை, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால், சாதாரண மக்கள் குடும்பம் நடத்துவதே பெரிய பிரச்சினையாகி விட்டது.

நா நாயகி என்ற மாநாட்டின் மூலமாக உங்களது வாழ்க்கையை மாற்றி கொள்ளுங்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.2 ஆயிரம்

அதுபோல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்காக கிரக லட்சுமி என்ற திட்டம் கொண்டு வரப்படும். இந்த மாநாட்டுக்கு வரும் முன்பாக பெண்களுக்காக தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும்படி கூறி இருந்தேன். அதன்படி, கிரக லட்சுமி திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கிடைக்கும். இந்த பணம் பெண்களின் வங்கி கணக்குக்கே நேரடியாக செலுத்தப்படும்.

ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் இந்த ரூ.2 ஆயிரம் பயன் உள்ளதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு உதவியாகவும் இருக்கும். இந்த திட்டத்தின் மூலமாக 1½ கோடி பெண்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் வந்து பங்கேற்று இருந்தனர். மாநாட்டில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சித்தராமையா, மகளிர் அணி தலைவிகள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று இருந்தனர்.


Next Story