ரூ.3 கோடி பரிசு பொருட்கள் பறிமுதல்
பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகருக்கு சொந்தமான குடோனில் ரூ.3 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை பறிமுதல் செய்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூரு:-
குடோனில் குக்கர்கள் பதுக்கல்
கர்நாடகத்தில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவது அதிகரித்து வருகிறது. இதற்கு கடிவாளம் போடும் விதமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் நகை, பணம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
2 லிட்டருக்கு மேல் மதுபானம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட ரொக்க பணத்தை எடுத்து செல்வதற்கு அனுமதி கிடையாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரு எலகங்காவில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் இருக்கும் குடோனில் குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.
பா.ஜனதா பிரமுகருக்கு சொந்தமானது
இதையடுத்து, அந்த குடோனில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஏராளமான குக்கர்கள் மற்றும் கெடிகாரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குடோன் பா.ஜனதா பிரமுகரான முனீந்திரகுமாருக்கு சொந்தமானதாகும். அவர், பேடராயனபுரா தொகுதியில் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட தயாராகி வருவதும் தெரியவந்தது.
அந்த குக்கர்கள், கெடிகாரங்களை வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, குடோனில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான குக்கர்கள், கெடிகாரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது பா.ஜனதா பிரமுகருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.10 லட்சம் வெள்ளி பொருட்கள்
இதுபோல், பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பெங்களூருவில் இருந்து வெளியே செல்லும் மற்றும் நகருக்குள் வரும் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு வாகனத்தில் ரூ.10 லட்சத்திற்கு வெள்ளி பொருட்கள் இருந்ததை சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த வெள்ளி பொருட்களை எடுத்து செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.