கர்நாடகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
கல்வி உதவித்தொகை
கர்நாடக அரசு சார்பில் நெசவாளர்கள் சம்மான் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. நேற்று கைத்தறி நெசவாளர்களுக்கு அந்த உதவித்தொகை ரூ.23.43 கோடியை விடுவிக்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த உதவித்தொகையை விடுவித்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்குகிறது. அந்த உதவித்தொகையை இன்று (நேற்று) அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் குழந்தைகளுக்கு வித்யாநிதி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நெசவாளர்களின் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
வேலை வாய்ப்புகள்
நெசவு தொழிலையை மேம்படுத்த வேண்டியது அவசியம். நெசவாளர்கள் நீண்ட காலம் பருத்தி பஞ்சுக்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து நாங்கள் உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நெசவாளர்களை மீட்கும் வகையில் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். மொத்தம் 46 ஆயிரத்து 484 நெசவாளர்கள் பயன் பெறுவார்கள். நெசவு தொழில் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நெசவு என்பது ஒரு கலை. இந்த கலையை பாதுகாக்க வேண்டியது அவசியம். புதிய தொழில்நுடபத்தை பயன்படுத்தி அவர்கள் தங்களின் திறனை வெளிக்காட்டுகிறார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் ஜவுளி மற்றும் கைத்தறித்துறை மந்திரி சங்கர் பட்டீல், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.