சிகிச்சையின் போது உதடு துண்டான பெண்ணிற்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு
பல் சிகிச்சையின்போது, உதட்டின் ஒரு பகுதி துண்டானதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.60 ஆயிரத்தை இழப்பீடாக டாக்டர் வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பெங்களூரு:-
பல் சிகிச்சை
பெங்களூரு ராமமூர்த்திநகர் பகுதியில் 32 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு, தனது பற்கள் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முடிவு செய்தார். அதற்காக அவர் தனக்கு தெரிந்த பல் டாக்டர் கிளினிக்கிற்கு சென்றார். அப்போது டாக்டர் வினோத், அந்த பெண்ணின் பற்களை லேசர் சிகிச்சை மூலம் சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக அவரது, உதட்டின் ஒரு பகுதி லேசர் சிகிச்சையின்போது துண்டானது.
இதனால் அவரது வாய் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியதை கண்டு, அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே டாக்டர், காயம் ஏற்பட்ட உதட்டுப்பகுதியில் பேண்டேஜ் போட்டு, அவரை அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அந்த பெண் மற்றொரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
ரூ.60 ஆயிரம் இழப்பீடு
அங்கு அவருக்கு உதட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 5 முறை அவரது உதட்டில் தையல் போடப்பட்டது. காயம் குணமடைந்த நிலையிலும், அவரது உதட்டில் தழும்பு தெரிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து சிகிச்சையின்போது அலட்சியமாக செயல்பட்ட டாக்டரிடம் ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்டு அவர் பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர், சிகிச்சையின்போது டாக்டரின் அலட்சியப்போக்கு, பெண்ணுக்கு தழும்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரது முகத்தின் அழகு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட டாக்டர் வினோத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.60 ஆயிரத்தை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.