டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி...!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.
புதுடெல்லி,
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த வகையில், தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
பங்குச்சந்தை வர்த்தகத்தின் முடிவில் இன்று மாலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 846 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 427 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 774 புள்ளிகளுக்கு வர்த்தகமானது.
இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.93 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்தது. காலை பங்குச்சந்தை தொடங்கியபோது டாலரின் மதிப்பு 78.20 ரூபாய்க்கு வர்த்தகமான நிலையில் மதியம் அது சற்று அதிகரித்து 78.02 ரூபாய்க்கு வர்த்தகமானது.
ஒருகட்டத்தில் உச்சபட்சமாக டாலரின் இந்திய மதிப்பு மேலும் சரிந்து 78.29 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், பங்குச்சந்தை வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.20 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து.
நிதிசந்தைகளில் இருந்து அந்நிய முதலீடு வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.