மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், புதிய மேல்சாந்திகள் பதவியேற்று கொள்கிறார்கள். நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராமன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹரிகுமார் நம்பூதிரி ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் சன்னிதானத்தில் நடைபெறும். அதைத்தொடர்ந்து 18-ம்படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் சாமி தரிசனத்திற்கு பின்னர் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை (வியாழக்கிழமை) அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். அன்று முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி, அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14 -ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
இந்த நிலையில், அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பத்தனம் திட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அய்யப்ப பக்தர்களுக்கான சிறப்பு வார்டை கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, "சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பத்தனம் திட்டை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது" என்றார்.