சபரிமலையில் வெடி விபத்து சம்பவம்: மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், லியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
திருவனந்தபுரம்,
சபாிமலைக்கு வரும் பெரும்பாலான அய்யப்ப பக்தர்கள் சன்னிதானத்தில் வெடி வழிபாடு நடத்துவது வழக்கம். சபரிமலை மாளிகபுரத்தம்மன் கோவிலுக்கு அருகே வெடி மருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள கொட்டகை உள்ளது. இங்கு செங்கன்னூரை சேர்ந்த ஜெயகுமார் (வயது 47), அமல் (28), ரஜீஷ் (35) ஆகிய 3 பேர் வெடிமருந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2-ந் தேதி மாலை 5 மணியளவில் திடீரென்று வெடிமருந்து கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் வெடி மருந்துகள் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஜெயகுமார், அமல், ரஜீஷ் ஆகிய 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் கடந்த 6-ந் தேதி ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஜீஷ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.