இந்தியாவில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை கடந்த 6 மாதங்களில் 21 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை கடந்த ஆறு மாதங்களில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
ஜேஎல்எல் என்ற ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் 7 முக்கிய இந்திய நகரங்களில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஜனவரி முதல் ஜூன் வரையில் அபார்ட்மெண்ட்கள் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008-க்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளில் அதிகபட்ச அரையாண்டு விற்பனை அளவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அபார்ட்மெண்டுகள் விற்பனையில் முதலிடத்தில் உள்ள பெங்களூருவில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 26,625 அபார்ட்மெண்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள மும்பையில் 26,188 அபார்ட்மெண்டுகளும் மூன்றாவது இடத்தில் உள்ள புனேவில் 25,201 அபார்ட்மெண்டுகளும் விற்பனையாகி உள்ளன.
நான்காம் இடத்தில் உள்ள டெல்லியில் 19,507 அபார்ட்மெண்டுகளும் ஐந்தாம் இடத்தில் உள்ள ஐதராபாத்தில் 15,925 அபார்ட்மெண்டுகளும் விற்பனையாகியுள்ளன. இந்த வரிசையில் ஆறாவது இடத்தை பெற்றுள்ள சென்னையில் 7,319 அபார்ட்மெண்டுகளும் ஏழாவது இடத்தை பெற்றுள்ள கொல்கத்தாவில் 5,822 அபார்ட்மெண்டுகளும் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களை ஒப்பிடுகையில் விற்பனையளவு ஐதராபாத்தில் 69 சதவீதமும் புனேவில் 50 சதவீதமும் சென்னையில் 47 சதவீதமும் அதிகரித்துள்ளது.
50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட அபார்ட்மெண்டுகள் விற்பனை 30,125 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஒரு கோடி ரூபாய் முதல் ஒன்றரை கோடி ரூபாய் விலை கொண்ட அபார்ட்மெண்டுகள் விற்பனை 67 சதவீதம் அதிகரித்துள்ளது.