திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1-ந்தேதி சாம வேத பாராயணம் தொடக்கம்
இந்தப் பாராயணம் தினமும் காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடக்கிறது.
திருப்பதி,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை நடக்கிறது.
வேத பண்டிதர்கள் ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் வீதம் 6 குழுக்களாகப் பாராயணம் செய்கிறார்கள். இந்தப் பாராயணம் தினமும் காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடக்கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் பாராயணம் நடந்தது. கொரோனா தொற்று பரவலின்போது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை கிருஷ்ண யஜுர் வேத பாராயணம் நடந்தது. அதன் பிறகு ரிக் வேத பாராயணம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.