மத்திய அரசு குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கு சஞ்சய் ராவத் ஆதரவு


மத்திய அரசு குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கு சஞ்சய் ராவத் ஆதரவு
x
தினத்தந்தி 22 May 2022 2:50 AM IST (Updated: 22 May 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மண்எண்ணெய்

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

அங்கு பேசிய அவர், "காங்கிரஸ் இந்தியாவை மீட்க போராடுகிறது. பாகிஸ்தானில் நடப்பதைபோல இந்தியாவில் மெல்ல மெல்ல நடக்க தொடங்குகிறது. வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்துவரும் போதிலும், வெறுப்பு அரசியல் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பா.ஜனதா இந்தியாவில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது.

ஆனால் இப்போது நல்ல இடத்தில் இல்லை. பா.ஜனதாவின் விஷ பிரசாரம் நாட்டை பாதித்துள்ளது. வகுப்புவாத பிரசாரம் மூலம் நாடு முழுவதும் பா.ஜனதா மண்எண்ணெயை ஊற்றி விட்டுள்ளது. தற்போது உள்ள ஒரே ஒரு தீப்பொறி பெரிய பிரச்சினையை உருவாக்கும்" என்றார்.

சஞ்சய் ராவத் கருத்து

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது உண்மை தான். நாங்கள் இதை வெவ்வெறு வார்த்தையில் கூறியுள்ளோம். மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் நாட்டின் ஜனநாயகத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது. மத்தய அரசுக்கு எதிராக பேசுபவர்களுக்கு, எதிராக பிரசாரம் செய்யப்படுவதை நாம் பார்க்கலாம். இது ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் நல்லதல்ல.

நம் நாட்டில் உள்ள மக்கள் பயப்படுகிறார்கள், அவர்கள் உண்மையை பேச தயாராக இல்லை. மத்திய அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளின் தொடர் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story