வீரசாவர்க்கர் பறவை மீது அமர்ந்து தாய்நாட்டிற்கு வந்து செல்வார்- கன்னட பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கருத்தால் சர்ச்சை
சிறையில் இருந்தபோது வீரசாவர்க்கர் பறவை மீது அமர்ந்து தாய்நாட்டிற்கு வந்து செல்வார் என்று 8-ம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற வரிகளால் சர்ச்சை எழுந்துள்ளது.
பெங்களூரு,
நாடு சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வீரசாவர்க்கர் முக்கிய பங்காற்றினார் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், அவர் ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக அரசின் பாடத்திட்டத்தில் 8-ம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் வீரசாவர்க்கர் குறித்த சிறிய வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.
அதில், "அந்தமான் சிறையில் வீரசாவர்க்கர் அடைக்கபட்டிருந்த அறையில் ஒரு முக்கிய துளை கூட இருக்கவில்லை. ஆனால் ஒரு பறவை தினமும் அவரது அறைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தது. அப்போது அந்த பறவையின் இறக்கையில் வீரசாவர்க்கர் அமர்ந்து தாய்நாட்டிற்கு தினமும் வந்து செல்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் பாடத்திட்ட குழுவுக்கு வாய் வழியாக புகார்கள் வந்துள்ளன.