குலுக்கல் முறையில் பாிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி
குலுக்கல் முறையில் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த மர்மநபரை சைபர் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
உப்பள்ளி;
ஆன்லைன் பொருட்கள்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா லிங்கராஜா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபாய். இவர் செல்போனில் ஒரு செயலி மூலம் ஆன்லைனில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கினார். இதற்காக அவர் தனது விவரங்களை பதிவு செய்து இருந்தார். அந்த விவரங்களை சேகரித்து கொண்ட மர்மநபர் ஒருவர் லட்சுமிபாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த மர்மநபர் லட்சுமிபாயிடம் நீங்கள் ஆன்லைன் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கியதற்காக உங்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.12 லட்சம் ரொக்கப்பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார். அந்த பரிசு தொகையை பெற வேண்டும் என்றால் அதற்காக வரி செலுத்தவேண்டும் என்றும், அதற்காக தான் அனுப்பும் `கியூ-ஆர்-கோடை ஸ்கேன்' செய்து அதில் கூறப்பட்டு உள்ள வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ரூ.8.98 லட்சம் மோசடி
இதை நம்பிய லட்சுமிபாய், மர்மநபர் வாட்ஸ்-அப்பில் அனுப்பி கியூ-ஆர்-கோடை ஸ்கேன் செய்து அதில் கூறப்பட்டு இருந்த வங்கி கணக்கிற்கு ரூ.8.98 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் நாட்கள் கடந்தும் லட்சுமிபாய்க்கு எந்தவித பணமும் வங்கி கணக்கிற்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த லட்சுமிபாய், அந்த நபர் அழைத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உள்ளார்.
அப்போது அந்த செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப்போதுதான் மர்மநபர் தன்னை ஏமாற்றி தன்னிடம் இருந்து ரூ.8.98 லட்சத்தை மோசடி செய்தது லட்சுமிபாய்க்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.