வீட்டை விற்று தருவதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி
வீட்டை வி்ற்று தருவதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு;
போலீசில் புகார்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் நோயல் டிகுன்ஹா. இவர், துபாயில் வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் நோயல், மங்களூரு கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
துபாயில் பணியாற்றியபோது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மங்களூருவில் உள்ள எனது வீட்டை விற்க முடிவு செய்தேன். இதற்கிடையே எனக்கு, அக்னெலோ பெரேரா என்பவர் அறிமுகமானார். அவர், என்னிடம் வீட்டை விற்று தருவதாக கூறினார்.
ரூ.11 லட்சம் மோசடி
மேலும் வீட்டை விற்க ரூ.11 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தார். இதை நம்பி அவருக்கு ரூ.11 லட்சம் கொடுத்தேன். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் வீட்டை விற்ற பணத்தை தரவில்லை. இதுபற்றி கேட்க மங்களூருவுக்கு வந்தேன்.
அப்போது தான் அவர், சிலருடன் சேர்ந்து போலியான ஆவணங்கள் தயாரித்து வீட்டை ஒருவருக்கு விற்றதும், தனக்கு பணம் தராமல் மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதுபற்றி கேட்டபோது அக்னெலோ பெரேரா கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை ஏற்ற மங்களூரு கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.