கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படும்; பள்ளிக்கல்வி துறை மந்திரி மது பங்காரப்பா பேட்டி


கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படும்; பள்ளிக்கல்வி துறை மந்திரி மது பங்காரப்பா பேட்டி
x

கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் விரும்பவில்லை

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி பாடத்திட்டம் மாற்றப்படும் என்று கூறியுள்ளோம். அந்த தேர்தல் அறிக்கை குழுவின் துணைத்தலைவராக நான் பணியாற்றினேன். மாணவர்களின் மனநிலையை அசுத்தப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. கல்வி கற்க மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். அதற்கு தொந்தரவு ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.

இந்த விஷயத்தில் என்னுடையதோ, அரசுடையதோ அல்லது அதிகாரிகளுடையதோ தவறு இருக்கக்கூடாது. கல்வி கற்க நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நாளை (இன்று) முதலே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படும். ஆனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பாடத்திட்டத்தை எப்படி மாற்ற போகிறோம் என்பது தான் தற்போது எங்கள் முன்பு உள்ள சவால்.

மன்னிக்க முடியாது

இந்த விஷயத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி நாங்கள் செயல்படுவோம். பாடத்திட்டங்கள் மூலம் குழந்தைகளின் மனதை அசுத்தப்படுத்துவதை மன்னிக்க முடியாது. பாடத்திட்டம் மாற்றம் குறித்து ஒரு குழுவை அமைக்க உள்ளோம். இதுகுறித்து தற்போதைக்கு அதிகம் கூற முடியாது.

1-ந் தேதி (நாளை) மந்திரிசபை கூட்டம் நடக்கிறது. அதில் இதுபற்றி விவாதிக்கப்படும். முந்தைய பாடத்திட்ட குழு தலைவர் ரோகித் சக்ரதீர்த்தா, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்துகளை சேர்த்து. சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துகளை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேசிய கல்வி கொள்கை

ஹிஜாப் விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. அதனால் அதுபற்றி நான் பேசுவது தவறு. இந்த விஷயத்தில் அரசு சட்டப்படி தனது பணிகளை செய்யும். அரசின் அறிவுறுத்தல்கள்படி செயல்பட வேண்டும் என்று எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்வது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும். தற்போது தான் நான் இந்த துறையின் பொறுப்பை ஏற்றுள்ளேன்.

இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.


Next Story