விவசாய கண்காட்சியில் குவிந்த பள்ளி மாணவ-மாணவிகள்
சிக்கமகளூருவில் விவசாய கண்காட்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் குவிந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் பந்தயமும் நேற்று நடந்தது.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு திருவிழா
சிக்கமகளூரு நகரில் கடந்த 18-ந்தேதி சிக்கமகளூரு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவையொட்டி சிக்கமகளூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் நகரில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கண்காட்சியும் நடந்து வருகிறது. இதனால் சிக்கமகளூரு மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் சிக்கமகளூரு திருவிழாவுக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்றும் சிக்கமகளூரு நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று சிக்கமகளூரு வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடந்தது. இதில் வேளாண் பொருட்கள், உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
மாணவ-மாணவிகள் குவிந்தனர்
இந்த விவசாய கண்காட்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அத்துடன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவ-மாணவிகள் இந்த விவசாய கண்காட்சியில் குவிந்தனர். சுமார் 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் கண்காட்சியில் கலந்துகொண்டனர். இதனால் விவசாய கண்காட்சியில் கூட்டம் அலைமோதியது. அத்துடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மேலும், கூட்டத்தில் சிக்கி தவித்த மாணவிகள் வேளாண் பொருட்களை சரியாக பார்க்க முடியவில்லை.
கூட்டத்தில் சிக்கி கொண்ட மாணவர்கள் வெளியே செல்ல முடியாமலும், திரும்பி வர முடியாமலும் தவித்தனர். இதையடுத்து கண்காட்சிக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி, மாணவ-மாணவிகளை அதிகாரிகள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உணவு மேளா
இந்த நிலையில் அதிக கூட்டம் வரும் இடங்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விவசாய கண்காட்சிக்கு 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளை அழைத்து வர வேண்டாம் என்று பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை செயல் அதிகாரி பிரபு உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுபாஸ் சந்திரபோஸ் மைதானத்தில் உணவு மேளா நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட உணவு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மோட்டார் சைக்கிள் பந்தயம்
சிக்கமகளூரு திருவிழாவையொட்டி பேளூர் சாலையில் மாகடி பகுதியில் நேற்று சிக்கமகளூரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது. இந்த பந்தயத்தை சிக்கமகளூரு பா.ஜனதா எம்.எல்.ஏ. சி.டி.ரவி தொடங்கி வைத்தார்.
இந்த பந்தயத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்றனர். இதனை காண குவிந்த மக்கள், மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை உற்சாகப்படுத்தினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதேப்பகுதியில் கார் பந்தயம் நடைபெற உள்ளது.
நாய்கள் கண்காட்சி
மேலும் சிக்கமகளூரு வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு கல்லூரி வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடந்தது. இதில் 'சார்லி-2' என்ற கன்னட படத்தில் நடித்த நாயும் பங்கேற்றது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் வளர்ப்பு நாயுடன் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டனர். இந்த நாய்கள் கண்காட்சியை சி.டி.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் 'சார்லி-2' படத்தில் நடித்த நாய்க்கும், அதன் உரிமையாளருக்கும் பாராட்டு விழா நடந்தது. 4 நாட்களாக நடந்து வந்த சிக்கமகளூரு திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.