நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைப்பு
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 55 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு 85 குழந்தைகளும், 105 பெரியவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளில் 74 குழந்தைகளும், 86 பெரியவர்களும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புறநோயாளிகளாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து டீன் ரேவதி உத்தரவின் பேரில் டெங்கு காய்ச்சல் மற்றும் காய்ச்சலுக்கு என்று தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் தனி வார்டுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.