இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ. தலைமையிலான போராட்டத்தில் வன்முறை - மேற்குவங்காளத்தில் பதற்றம்


இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ. தலைமையிலான போராட்டத்தில் வன்முறை  - மேற்குவங்காளத்தில் பதற்றம்
x

இந்திய மதச்சார்பற்ற முன்னணி மேற்குவங்காளத்தை சேர்ந்த அரசியல் கட்சியாகும்.

கொல்கத்தா,

இந்திய மதச்சார்பற்ற முன்னணி மேற்குவங்காளத்தை சேர்ந்த அரசியல் கட்சியாகும். இஸ்லாமிய மத போதகர் அப்பாஸ் சித்திக் என்ற நபரால் இந்த கட்சி தொடங்கப்பட்டது.

இந்த கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அப்பாசின் இளைய சகோதரனான நவ்சத் சித்திக் பகன்கர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். அப்பாஸ் தனது இளைய சகோதரனான நவ்சத் சித்திக்கை கட்சியின் தலைவராக நியமித்தார்.

இதனிடையே, பகன்கர் பகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அப்பாசின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி நிர்வாகியை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த தாக்குதலை கண்டித்து இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினர் அக்கட்சியின் எம்.எல்.ஏ. நவ்சத் சித்திக் தலைமையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டொரினா கிராசிங் பகுதியில் சாலையில் ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் கண்ணில் பட்ட கார், பைக்கை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கல், கட்டையை கொண்டு தாக்கினர். இதனால், அப்பகுதியே வன்முறை கலமாக மாறியது.

உடனடியாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எம்.எல்.ஏ. நவ்சத் சித்திக் உள்பட 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story