எதிர்க்கட்சிகளை ரஷிய கூலிப்படையுடன் ஒப்பிட்ட உத்தவ் தாக்கரே சிவசேனாவால் சர்ச்சை
நாட்டில் எதிர்க்கட்சிகளை ரஷிய கூலிப்படையான வாக்னர் அமைப்புடன் உத்தவ் தாக்கரே சிவசேனா ஒப்பிட்டு உள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
புனே,
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்த கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
அக்கட்சிக்கு எதிராக மாற்று அணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதற்காக, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாகவும், பா.ஜ.க.வை வீழ்த்த ஓரணியில் திரள்வது பற்றி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். பா.ஜ.க.வுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கம் ஒன்றில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் பா.ஜ.க.வை, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக அந்நாட்டில் கலகத்தில் ஈடுபட்டு உள்ள வாக்னர் குழுவுடன் ஒப்பிட்டு கட்டுரை ஒன்று வெளிவந்தது.
இந்த வாக்னர் என்ற பெயரிலான அமைப்பு, ரஷியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தி ஒரு கூலிப்படையாக இயங்கி வருகிறது. அந்த அமைப்பு தொடக்கத்தில் ரஷிய ஆதரவு படையாக செயல்பட்டு, உக்ரைனில் தாக்குதலை நடத்தியது. சமீபத்தில் அதன் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அதன்பின் சமரசம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வாக்னர் அமைப்பை ஜனநாயக காவலர் என சாம்னா அமைப்பு அழைத்து உள்ளதுடன், அதனை இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிட்டு உள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று, வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, மோடி மற்றும் அமித்ஷா இருவரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிக பெரிய அளவில் கூலிப்படைகளை உருவாக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
புதினை போன்று மோடி மற்றும் அமித்ஷா இருவரும் சர்வாதிகாரம் கொண்டு வரப்பட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.