இடஒதுக்கீட்டின் பலன்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
இட ஒதுக்கீட்டின் பலன்கள் மக்களுக்கு எந்த அளவுக்கு போய் சேர்ந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
மக்களுக்கு உரிமைகள்
கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
கர்நாடகத்தில் மக்கள் பல்வேறு பொருளாதார நிலைகளில் உள்ளனர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே மனரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்ட சமூகத்தினர் உள்ளனர். அம்பேத்கர் அத்தகைய மக்களுக்கு உரிமைகள் வழங்கினார். கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் தற்போது முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
வாய்ப்பு கிடைக்கவில்லை
அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமை, எந்த அளவுக்கு பயன்பட்டுள்ளது என்பது குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுகுறித்து நாம் விவாதிக்க வேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் அரசின் திட்டங்களால் அந்த மக்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, எந்த மக்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன, யாருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
எங்களுக்கு தெரிந்தபடி, இட ஒதுக்கீட்டின் பல சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ஏற்கனவே கிடைத்தவர்களுக்கே அதன் பலன்கள் மீண்டும் கிடைக்கிறது. அரசியல் சாசனத்தின் இந்த பலன்களை எப்படி பெறுவது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. கிராமப்புற மக்கள், குடிசைகளில் வாழும் மக்கள், ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு குறித்து விழிப்புணர்வு கூட இல்லை.
நமக்கு தெரியவில்லை
நமது உரிமைகள் குறித்து நமக்கு தெரியவில்லை என்றால், அதை பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அரசின் திட்டங்களின் பயன் கடைக்கோடியில் உள்ள மனிதருக்கு கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் 17 ஆயிரம் பேருக்கு அதன் பலன்கள் கிடைத்துள்ளன. ரூ.595 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியமாக தலா ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களை ஆழ்துளை கிணறுகளை அமைத்து பம்பு செட்டுகளை பொருத்தி கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற பயனாளியின் நிலத்தின் தான் ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும். சுயதொழில் செய்ய பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சுயதொழில் திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தூய்மை பணியாளர்கள்
பெங்களூரு, மைசூரு, கலபுரகி, உப்பள்ளி-தார்வார், மங்களூரு ஆகிய நகரங்களில் மெகா விடுதிகளை கட்ட முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு விடுதியிலும் 1,000 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் செய்யப்படுகின்றன. வருகிற நாட்களில் மாவட்ட தலைநகரங்களில் இத்தகைய விடுதிகள் கட்டப்பட வேண்டும். 11 ஆயிரத்து 141 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேலும் 13 ஆயிரம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளோம். இதுவரை நாங்கள் 24 ஆயிரம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்துள்ளோம். இது ஒரு புரட்சிகரமான முடிவு.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.