எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்டபோலீஸ் துறை ஊழியரின் ஜாமீன் மனு தள்ளுபடி
எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட போலீஸ் துறை ஊழியரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
பெங்களூரு-
எஸ்.ஐ. தேர்வு முறைகேடு
கர்நாடகத்தில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து அந்த வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். மேலும் உயர் போலீஸ் அதிகாரி உள்பட 80-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் போலீஸ் துறையில் உதவியாளராக பணி செய்து வந்த மஞ்சுநாத் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் தனக்கு ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
ஜாமீன் மனு தள்ளுபடி
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மஞ்சுநாத் இடைத்தரகராக செயல்பட்டு பலரிடம் ரூ.45 லட்சம் வரை லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதற்கு முயன்றுள்ளார். முறைகேடு வழக்கு இன்னும் நிறைவடையவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் வெளியே சென்று ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உள்ளது.
எனவே வழக்கு விசாரணை முடியும் வரை அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முறைகேடு வழக்கு நிறைவு பெறாததால் மஞ்சுநாத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.